search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரம்பா ஏரி"

    தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி அருகே உள்ள கரம்பா ஏரியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். #DMK #MKStalin
    பூதலூர்:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகு பகுதிகளையும், சீரமைப்பு பணிகளையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கிருந்து கார்மூலம் திருச்சி வழியாக தஞ்சைக்கு புறப்பட்டு வந்தார். செல்லும் வழியில் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி அருகே உள்ள கரம்பா ஏரியை ஸ்டாலின் பார்வையிட்டார்.

    தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் ஏரியை பார்த்த அவர் ஏரியில் சிறிதுதூரம் நடந்து சென்றார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருவையாறு துரை.சந்திர சேகரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

    அப்போது மு.க.ஸ்டாலின், கரம்பா ஏரியில் தண்ணீரின்றி இருப்பது குறித்தும், அதற்குரிய காரணம் குறித்தும் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.விடம் கேட்டறிந்தார்.

    பின்னர் மு.க.ஸ்டாலினை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது குறித்தும், தூர்வாரும் பணியின் மெத்தனம், முறைகேடு குறித்தும் புகார் தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் சிலர், ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.

    மு.க,ஸ்டாலின் காலை 10.10 மணிக்கு கரம்பா ஏரியை பார்வையிட்டார். பின்னர் 10-15 மணிக்கு அங்கிருந்து தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார்.

    வறண்டு கிடக்கும் கரம்பா ஏரி

    தஞ்சையில் இருந்து மன்னார்குடி வழியாக வடுவூர் ஏரியை பார்வையிட்டார்.

    இன்று பிற்பகலில் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளைக்கு செல்கிறார். அவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன் முறையாக திருவாரூருக்கு செல்கிறார். இதனால் அவருக்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து திருவாரூர் அடுத்த காட்டூரில் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு செல்கிறார். அங்கு கருணாநிதி உருவப்படம், அஞ்சுகம் அம்மையார் சிலை, மற்றும் முரசொலி மாறன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இதன்பிறகு திருவாரூர் சனனதிதெருவில் உள்ள இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்துகிறார். பிறகு மாலையில் திருவாரூரில் இருந்து தஞ்சை வழியாக திருச்சிக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். #DMK #MKStalin
    ×